ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகளின் வரலாறு

பைந்தமிழ் நாட்டின்கண் உள்ள பஞ்ச பூதஸ்தலங்களில் நடுநாயாகமாக நின்று அக்னி சொரூபமாக காட்சியளித்து நினைத்தாலே முக்தியளிக்கும் உண்ணாமலை உடனாகிய திருவண்ணாமலையின் ஈசான்ய திக்கில் 20 கி.மீ வடகிழக்கே மங்கலத்துக்கு அருகில் (3கி.மீ) ஏழை விவசாயிக்கள் பலர் வசிக்கும் ஒரு சிறு கிராமம் கருமாரப்பட்டி. இங்கு திருவாளர். சின்னத்தம்பி திருமதி. குள்ளம்மையார் என்னும் எளிய விவசாய குடும்ப தம்பதிகளுக்கு 17.8.1927 அன்று 3-வது குழந்தையாகப் பிறந்தவர் வெள்ளையன் என்கின்ற இன்றைய வெள்ளையானந்த சுவாமிகள் ஆவார். பெற்றோர்களின் தவப்பயனாய் அவதரித்த தவக்கொழுந்து கருமாரப்பட்டிசாமி என பக்தர்கள் அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகள் 15 ஆண்டுகளாக உணவு உண்ணாமலும் தண்ணீர் பருகாமலும் ஒரே இடத்தில் அமர்ந்த 47 ஆண்டுகளாக கடும் தவம் செய்து சித்திகள் பெற்று தன்னை நாடி வருகின்றவர்கள் குறைகளை அறிந்து அருள் நோக்கும் அருள் வாக்கும் புரிந்து விபூதியளித்து அருள் செய்து வந்தார். இவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் உள்ளத்தில் கிருஷ்ண பகவானும் சிவபெருமானும் நிரம்பி அருள் பொழிந்து கொண்டு இருந்தனர். இதன் விளைவாக 7,8 வயது சிறுபையனாக இருக்கும் போதே தம் ஊரில் உள்ள கிருஷ்ணன் பஜனை கோயிலுக்கு காலை தோறும் பூஜை செய்துவிட்டு அங்கிருந்து தென்மேற்கில் தெரியும் அருள்மிகு அருணாசலத்தை நோக்கி மனமுருக கும்பிடுவது தான் தமது அன்றாடக்கடமையாக செய்து வந்தார். சக வயது குழந்தைகளுடன் சடுகுடு, கில்லிதாண்டி, தொடை தட்டி முதலிய கிராம விளையாட்டுகளை மிக அற்புதமாக விளையாடி நல்ல இளைஞர்கள் கூட்டம் சேர்ந்து மாலையில் நடுத்தெரு விநாயகர் கோயிலுக்கு கூட்டி வந்து திருப்புகழ் பஜனைப்பாடல்கள் பாடுவதும், தமக்கு தெரிந்த இறைவன் திருவிளையாடல் சம்பந்தமான அற்புதக் கதைகளைச் சுவைபடச் சொல்லுவதுமாக வளர்ந்து வந்தார். குப்பகவுண்டன் என்பவர் இவருக்கு 15 வயது மூத்தவர். பூண்டி மகானிடம் பெரும் ஈடுபாடு உடையவர். வெள்ளையானந்தரை இந்த மகானிடம் கூட்டிப்போக எவ்வளவோ முயற்சிகள் செய்தார். தம் உள்ளம் முழுவதும் சிவா-விஷ்ணு நினைவாக இருந்த வெள்ளையானந்தருக்கு திருவண்ணாமலை – திருப்பதி வெங்கடாசலபதியைத் தவிர்த்து வேறு எந்த சாமிகள் மீதும் நாட்டம் ஏற்படவில்லை. தவறாது திருவண்ணாமலை கிரிவலம் சுற்றி வருவார். தினசரி உள்ள10ர் கிருஷ்ணன் கோவிலில் பூஜை செய்த கையோடு அருணாச்சல தரிசனம், மாலையில் பஜனை என்று வழக்கமாக கொண்டார். இது தவிர வேறு யாரைப் பார்க்கவும் சிந்திக்கவும் விருப்பமேற்படவில்லை. வயது ஏறிக்கொண்டு வந்தது. முப்பது வயதாகியும் இறை நாட்டமிகுந்து இல்லற நாட்டம் சிறிதும் இல்லாமல் தம் விவசாய வேலைகள் உண்டு, தம் பூஜை, பஜனை உண்டு என்று வாழ்ந்துவந்தார். திண்ணைப் பள்ளியில் 2,3 ஆண்டுகள் பயின்றது தான் இவர் கல்வி. மேலும் படிக்க


Videos